Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கி விடலாம்: சுப்ரீம் கோர்ட்டு.

அரசு துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடைபெறுவதில்லை. அரசு அதிகாரிகளும் பாவம். மிகவும் ஏழைகளாக இருக்கின்றனர். ஒவ்வொரு பணியையும் முடிப்பதற்கு இவ்வளவு தொகை லஞ்சமாக அளிக்க வேண்டும் என அரசே நிர்ணயம் செய்யலாமே?

புதுடெல்லி, அக்.11-

"அரசு துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. எனவே, லஞ்சம் வாங்குவதை சட்டப்பூர்வமாக்குவதோடு ஒவ்வொரு வேலைக்கும் சரியான லஞ்சத் தொகையை நிர்ணயம் செய்து விடலாம்'' என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி மோகன்லால் சர்மா என்பவர், வருமான வரி மோசடி குறித்த வழக்கை விசாரிக்காமல் இருப்பதற்காக அந்த மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இறுதியில் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் பெற்றார். இது குறித்து வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டு, சர்மாவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சர்மா மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, டி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு முன்பு நடைபெற்றது.

நீதிபதிகள் வேதனை

விசாரணையில் சி.பி.ஐ. சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா மற்றும் மூத்த வக்கீல் வேணுகோபால் ஆகியோர் ஆஜராகினர். சர்மா சார்பாக அவரே ஆஜராகி வாதாடினார். தான் நிரபராதி என்றும் தான் லஞ்சம் வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். அவருடைய வாதங்கள் மீது நீதிபதிகள் அதிக கவனம் செலுத்தவில்லை.

ஆனால், நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் குறித்து கடுமையான வேதனை தெரிவித்தனர். மேலும், `லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கி விடலாம் என்றும் பணம் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை` என்றும் கிண்டலுடன் கூறினார்கள்.

விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-

லஞ்ச தொகை நிர்ணயம்

நாடு முழுவதும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் லஞ்சம், ஊழல் பரவி இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். அரசு துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எதுவுமே நடைபெறுவது கிடையாது. குறிப்பாக, வருமான வரித் துறை, விற்பனை வரித் துறை மற்றும் கலால் வரித் துறை ஆகியவை லஞ்ச ஊழலில் மிக வேகமாக முன்னேற்றம் அடைந்துள்ளன.

லஞ்சத்தை அரசு சட்டப்பூர்வமாக்கினால் என்ன? அரசு துறைகளில் ஒவ்வொரு பணியையும் முடிப்பதற்கு இவ்வளவு தொகை லஞ்சமாக அளிக்க வேண்டும் என அரசே நிர்ணயம் செய்யலாமே? அப்படி செய்தால், ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு பணம் அளிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு தனி நபரும் அறிந்து வைத்திருப்பார். அப்போது, பேரத்துக்கு இடம் இருக்காது.

நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக அதிகாரிகளால் லஞ்சம் கேட்க முடியாது. அதுபோல, கூடுதலாக லஞ்சம் கொடுத்து விட்டோமோ என்ற கவலையும் பொது மக்களுக்கு ஏற்படாது

ஏழை அரசு அதிகாரிகள்

அரசு அதிகாரிகளும் என்ன செய்வார்கள்? பாவம். மிகவும் ஏழைகளாக இருக்கின்றனர். அவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில், பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மூத்த வக்கீல் வேணுகோபாலை பார்த்து, `நாட்டில் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்த சுப்ரீம் கோர்ட்டில் யோசனை குறித்து உங்கள் கருத்துகள் என்ன?' என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த வேணுகோபால், "இதை விட, நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் தார்மீக நெறிமுறைகளை முக்கியமாக போதிப்பது சிறந்ததாக இருக்கும். அப்படி செய்தால், எதிர்கால தலைமுறையாவது லஞ்சத்தின் பிடியில் இருந்து விடுதலை பெறும்'' என்றார்.

மற்றொரு வழக்கு

இதுபோல, செக் மோசடி குறித்த மற்றொரு வழக்கும் இதே பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் செக் மோசடி செய்த நபர் சார்பில் வக்கீல் வேணுகோபால் ஆஜரானார்.

எனவே, அவரைப் பார்த்து நீதிபதி மார்கண்டேய கட்ஜு, "வேணுகோபால் அவர்களே, உங்களுடைய தகுதிக்கு இது போன்றவர்களுக்காக நீங்கள் ஆஜராவதை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. மகாத்மா காந்தியும் ஒரு வக்கீல் தான். ஆனால், இது போன்றவர்களுக்கு ஆதரவாக அவர் ஒருபோதும் ஆஜரானது கிடையாது'' என்றார்.

அதற்கு பதிலளித்த வேணுகோபால், "நீதிபதி அவர்களே, அப்படிச் செய்தால், பெரும்பாலான என்னுடைய கட்சிக்காரர்களை ஒருவேளை நான் இழக்க நேரிடலாம்'' என்றார். உடனே, கோர்ட்டில் சிரிப்பொலி எழுந்தது.

எனினும், `இனி வரும் காலங்களில் கோர்ட்டு தெரிவித்த ஆலோசனையை கண்டிப்பாக பின்பற்றுவேன்' என உறுதி அளித்தார்.

SOURCE:http://www.dailythanthi.com/article.asp?NewsID=599935&disdate=10/11/2010

1 comment: